தென்மாவட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு!
தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி வெள்ளகோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருநெல்வேலியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (டிச.27) நிவாரண பொருட்களை வழங்கி உள்ளோம். நாளை (டிச.28) தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4000 மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி சேதங்களை பார்வையிட இருக்கிறோம்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே நாளில் 100 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மேலும் நிவாரணத்தொகையாக ரூ.21,000 கோடி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்: விசாரணைக்கு வர மறுக்கும் அதிகாரிகள் – அமலாக்கத்துறைக்கு 3-வது முறையாக சம்மன்!
ஆனால் வழக்கம் போல ரூ.900 கோடியை மட்டும் தான் ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. நெல், வாழை உள்ளிட்டவைகளுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணத்தை வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளிப்படை தன்மை இல்லை. அதில் தில்லுமுல்லு செய்ய முடியும். எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். எனவே பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையே வேண்டும்.
தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு கோரிய ரூ.21,000 கோடியை வழங்க வலியுறுத்தியும் வாக்கு சீட்டு முறையை வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.