’பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு’ - 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெற்று வருகிறது. பாமக நிறுவனர் இராமதாஸ், சரஸ்வதி இராமதாஸ், மகள் ஸ்ரீ காந்தி, பேரன் சுகந்தன் மற்றும் ராமதாஸ் தரப்பு பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.நேற்று அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், ராமதாஸின் புகைப்படமும் தனி இருக்கையும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெறும் மகளிர் மாநாட்டில் அன்புமணியின் படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கமாக கோவலன் - கண்ணகி வாழ்க்கை வரலாறு குறித்த வில்லுபாட்டு மற்றும் நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. பின்னர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தியால் படித்து நிறைவேற்றப்பட்டது. அவை,
பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் வேண்டும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். பெண்கள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் தடையின்றி விற்பதால் மாணவர்கள் இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் கொடுமைகள் தடுத்திட பெண் காவலர்களை ஆங்காங்கே நியமிக்கப்பட வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதம் இடஒதுக்கிடு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை , திருச்சி, அரியலூர், கடலூரில் அதிக நெல் விளையும் மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட வேண்டும். பூம்புகார் மீன்பிடி துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ஆகிய 14 தீர்மானங்கள் பாமக நிறுவனர் இராமதாஸ் முன்னிலையில் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.