வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!
வேங்கைவயல் விவகாரத்தில், 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலனியில், 25-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக அங்குள்ள சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் ஏதோ கலந்திருப்பதாக, சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது அதில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில், அன்னவாசல் வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடனடியாக அங்கு சென்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்: திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை!
மலம் கலந்திருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், தொட்டியில் உள்ள நீரை அப்புறப்படுத்தி, கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தினர். மேலும் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. இதையடுத்து, தங்களை யாரோ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலத்தை கலந்து சென்றுள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இச்சம்பவம் நிகழ்ந்து ஓராண்டை கடந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை 5 சிறார்கள் உட்பட 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த டிஎன்ஏ ஒத்துப்போகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் கூறியிருப்பதாவது:
"பரிசோதனை முடிவுகளின்படி 31 நபர்களின் டிஎன்ஏவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட மலத்தின் டிஎன்ஏவோடு ஒத்துப் போகவில்லை. இதற்கு அடுத்தபடியாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தை அணுகி உள்ளோம். இந்த வழக்கை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டியது உள்ளதால் அடுத்தடுத்த சோதனைகளின் அடிப்படையிலேயே குற்றவாளிகளை கண்டறிய முடியும்."
இவ்வாறு அவர் கூறினார்.