வங்கா நரி ஜல்லிக்கட்டை தடுக்க ரோந்து பணி தீவிரம்!
சேலத்தில் வங்கா நரி ஜல்லிக்கட்டை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது விசேஷமான ஒன்றாக உள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் சின்னம்ம நாயக்கன்பாளையம், எகொட்டவாடி, ரங்கனூர், பெரிய கிருஷ்ணாபுரம், சின்ன கிருஷ்ணாபுரம், மத்தூர், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில் காணும் பொங்கல் தினத்தன்று வங்காநரியை பிடித்து நரியாட்டம், ஜல்லிக்கட்டு நடத்தி வழிபடும் முறை 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால் வங்காநரி அரிய வனவிலங்கு பட்டியலில் இருப்பதால், இந்த நரியை பிடித்து வழிபடுவதற்கும், நரியாட்டம் நடத்துவதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: தங்கம் விலை: தொடர்ந்து 2-வது நாளாக சரிவு!
வனத்துறையில் இதுகுறித்து பொதுமக்களிடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இதனை தடுக்க டி.எஃப்.ஓ ஷஷாங் ரவி தலைமையில், வனச்சரகர்கள் வாழப்பாடி மாதேஸ்வரன், சேலம் சேர்வராயன் தெற்கு துரைமுருகன், தும்பல் விமல்ராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.