ஆக்ரா - உதய்பூர் இடையே செல்லும் #VandeBharat ரயிலை இயக்க அடித்துக் கொண்ட ஊழியர்கள்!
ராஜஸ்தானின் கங்காபூர் ரயில் நிலையத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை ஓட்டுவதற்கு, ரயில் ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு புதிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலை இயக்குவதற்கு ராஜஸ்தானின் கோட்டா மற்றும் ஆக்ரா ரயில்வே பிரிவைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் புதிய ரயில் ராஜஸ்தானின் காங்காபூர் நகருக்கு கடந்த 2-ம் தேதி வந்தபோது, அந்த ரயிலை ஓட்டுவதற்கு ரயில் டிரைவர்கள் போட்டியிட்டனர். இதனால் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 3 டிரைவர்கள் இன்ஜின் அறையின் ஜன்னல் வழியாக நுழைந்து உள்ளே செல்ல முயன்றனர். வந்தே பாரத் ரயிலில் ஏற்கெனவே வந்திருந்த ரயில் ஓட்டுநர்களை, இவர்கள் அடித்து வெளியேற்றினர்.
இச்சம்பவத்தையடுத்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் ரயில் ஓட்டுநர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியுள்ளது. வந்தே பாரத் ரயிலை இயக்குவது பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு உதவியாக இருக்கும் என்பதால், ரயில் ஓட்டிநர்கள் இடையே இந்தப் போட்டி நிலவுவதாக சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.