வாடிகனில் வான்ஸ்: ஈஸ்டரில் போப் உடன் சந்திப்பு!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித்த நிலையில், இன்று ஈஸ்டர் திருநாளையொட்டி போப் பிரான்சிஸை சந்தித்தார்.
“ஈஸ்டர் தினத்தன்று நல்வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக, போப் பிரான்சிஸ் ஒரு சிறிய தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது” என்று வத்திக்கான் அறிக்கை கூறியது.
ஈஸ்டர் திருநாளில் போப் பிரான்சிஸை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்டுள்ளார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் 2019ஆம் ஆண்டு கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க பிரிவுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியேற்றம், புலம்பெயர்தல், புலம் பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டங்கள் போன்ற டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து பகிரங்கமாக கருத்து வேறுபாடு கொண்ட போப் பிரான்சிஸை ஜே.டி. வான்ஸ் சந்தித்தது கவனம் ஈர்த்துள்ளது.