லாரி மீது வேன் மோதி விபத்து - திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வீடு திரும்பிய பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலத்தில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியை சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்கு சென்றனர். அவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு நேற்று இரவு வேனில் வீடு திரும்பினர். மடக சிரா - புல்ல சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்துக்கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு இந்துபுரம் மற்றும் பெங்களூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இது குறித்து குடிபண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.