தவெக டூ திமுக - செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்த வைஷ்ணவி!
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்த வைஷ்ணவி என்பவர்
இம்மாத முதல் வாரத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கோவைச் சேர்ந்த இவர் தொடர்ந்து கட்சி சார்ந்த பணிகள் மற்றும் கூட்டங்களில் நிராகரிக்கப்படுவதாக வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து வந்ததாகவும் மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார். மேலும் தன் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
அத்துடன் சிறுக சிறுக சேர்த்த ரூ 5 லட்சத்தை வைத்து கட்சியில் இருந்து நலத்திட்ட உதவிகளை செய்ததாகவும் உயர்மட்ட கட்சி நிர்வாகிகளின் நிராகரிப்பால் அதை தொடர முடியவில்லை என அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை முன் வைத்து தவெகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து பிரிந்த வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.