For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வைரமுத்து பல தலைமுறைகளோடு பயணிப்பார், அப்படி ஒரு...” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

வைரமுத்து பல தலைமுறைகளோடு பயணிப்பார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
09:08 PM Mar 16, 2025 IST | Web Editor
“வைரமுத்து பல தலைமுறைகளோடு பயணிப்பார்  அப்படி ஒரு   ”   முதலமைச்சர் மு க  ஸ்டாலின் பாராட்டு
Advertisement

கவிஞர் வைரமுத்துவின்  படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கமான "வைரமுத்தியம்" விழா சென்னையில் இன்று(மார்ச்.16) நடைபெற்றது. இதில்
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது”பொன்மாலைப் பொழுதில் தனது திரையிசை வாழ்க்கையை தொடங்கிய கவிஞர் வைரமுத்துவுக்கு இது உண்மையிலேயே பொன்னான நாள். தமிழின் புகழை உலகமெல்லாம் கொண்டு சேர்த்த அவரைப் பாராட்ட உலகத்தின் பல்வேறு அறிஞர் பெருமக்கள் வந்திருப்பது பாராட்டுக்குரியது. பல்வேறு நாடுகள்,  மாநிலங்கள் தமிழ்நாடு என்று பரந்து விரிந்த எல்லையை சேர்ந்த பல்கலைக்கழகங்களிலிருந்து 22 அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு கட்டுரைகளை வாசித்திருக்கிறார்கள். இது அவருக்கு பெருமை சேர்க்கும் விழா மட்டுமல்ல. தமிழுக்கும், தமிழ்க் கவிதைக்கும், இலக்கியத்துக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் வைரமுத்துவை பாராட்ட உலகமே வந்திருக்கும் உலகளாவிய இலக்கிய விழா இந்த விழா. இப்படி ஒரு இலக்கியத் திருவிழாவில் பங்கெடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

வைரமுத்து  எழுதிய 17 நூல்களை வெளியிட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி . இது அவர்கள் இரண்டு பேருக்கும் இருக்கக்கூடிய நட்பின் அடையாளம். முதன்முதலாக, 1989-ஆம் ஆண்டு 'எல்லா நதியிலும் என் ஓடம்' என்ற புத்தகத்தை கருணாநிதியை வைத்து வைரமுத்து வெளியிட்டார். நம்முடைய வைரமுத்து கருணாநிதியை தன்னுடைய ஆசான் என்றும், இலக்கியத் தந்தை என்றும் அழைப்பார்.

வைரமுத்துவின்  'தமிழாற்றுப்படை' நூலையும், 'மகா கவிதை' நூலையும் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நிலம் நீர் தீ காற்று வானம் ஆகிய ஐம்பூதங்களையும் யாராலும் அடக்க முடியாது, ஆனால் ஒரு கவிஞனால், தமிழ்க் கவிதைக்குள் அடக்க முடியும் என்று மெய்ப்பிக்கும் புத்தகம்தான் இந்த மகா கவிதை நூல் என்று நான் முன்பு குறிப்பிட்டேன். ஒரு தமிழ்க்கவி. உலகக் கவியாக மாறும் உயரம்தான் அந்த நூல். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று அப்போது நான் வேண்டுகோள் வைத்தேன். அது இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது.

முனைவர் மறைமலை இலக்குவனார் மொழிபெயர்த்த அந்த நூலை நமது மதிப்புக்குரிய முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் சிதம்பரம்  வெளியிட்டிருக்கிறார். பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வாழ்த்தியதை பார்க்கும்போது உலகக் கவியாக மகுடம் சூட்டப்பட்டுவிட்டார் நம்முடைய  வைரமுத்து என்றே சொல்லத் தோன்றுகிறது. திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். வைரமுத்து திறமான புலமையாளர் என்பதன் அடையாளம்தான் இன்றைக்கு அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து பாராட்டுவது.

பொதுவாக அறிஞர்கள் புலவர்கள் ஒருவர் இன்னொருவரை பாராட்ட மாட்டார்கள். ஆனால், நம்முடைய ஜெகத்ரட்சகன், யாரையும் வஞ்சனை இல்லாமல் பாராட்டுவார். எல்லோரும் இப்படி இருக்க மாட்டார்கள். அறிஞர்கள் கவிஞர்கள் பேராசிரியர்கள் என்று பெருமக்களால் போற்றப்படும் கவிஞராக நம்முடைய வைரமுத்து இருக்கிறார். இதை முன்கூட்டியே உணர்ந்துதான், 1999-ஆம் ஆண்டு 'பெய்யெனெப் பெய்யும் மழை' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, சான்றோர்கள் நிறைந்த அவையில் வைரமுத்துவுக்குக் "கவிப்பேரரசு" என்ற பட்டத்தை வழங்கினார். அந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் 'வைரமுத்தியம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. வைரமுத்தியம் என்ற நூலை நான் வெளியிட, ஜெகத்ரட்சகன் அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கன்னித் தமிழ், கற்கண்டுத் தமிழ்,  கந்தகத் தமிழ், காந்தத் தமிழ், காவியத் தமிழ் ஆகியவற்றின் மூலமாக, மண்ணை மக்களை மொழியை இனத்தை மானுடத்தைக் காக்கும் கொள்கைகளை வடித்துக் கொடுத்ததால்தான், அனைவராலும் பாராட்டப்படக்கூடிய மனிதராக கவிப்பேரரசு விளங்குகிறார். அவரது 71 வயதில் வைரமுத்தியம் விழா நடத்தப்பட்டாலும், பத்து வயதில் இருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கினார். இளங்கலை மாணவராக இருந்தபோதே 'வைகறை மேகங்கள்' என்ற முதல் கவிதை நூலை வெளியிட்டார்கள். மாணவராக அவர் இருந்தபோதே ஒரு கல்லூரியில் அதை பாடமாக வைத்துவிட்டார்கள். இதுதான் அவருடைய பெருமை.

எல்லோரும் வயதான பிறகு வாழ்க்கை வரலாற்றை எழுதுவார்கள். ஆனால், 28 வயதிலேயே 'இதுவரை நான்' என்ற தன்வரலாற்று நூலை எழுதும் அளவுக்கு அப்போதே புகழடைந்துவிட்டார் நம்முடைய வைரமுத்து. 1983-ஆம் ஆண்டு அந்த நூலை வெளியிட்டார். வைரமுத்து  கவிப்பேரரசாக ஏன் வளர முடிந்தது என்பதற்கான முழுக்கதையும் அதில்தான் இருக்கிறது. பிற்காலத்தில் கிடைத்த வெற்றிக்கும் புகழுக்கும் பின்னால் இருக்கும் அனுபவம்தான் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணம் என்பதை நீங்களெல்லாம் அறியலாம்.

என் பாதங்களுக்குக் கீழே பூக்கள் இல்லை. மொய்த்துக் கிடந்தவை முட்களே. எனினும், ரத்தம் துடைத்து நடந்து வந்தேன் என்ற வரலாறுதான் அவரை இந்தளவுக்கு கவிஞராய் படைப்பாளியாய் ஆக்கியிருக்கிறது. நாவல், சிறுகதை பாடல், வரலாறு,  தன்வரலாறு, பயணக் கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை திரைக்கதை,  திரை வசனம் என்று இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் நுழைந்து வெற்றி முத்தை எடுத்து வந்தவர் தான் நம்முடைய வைரமுத்து.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசியவிருதை ஏழு முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் இவராகதான் இருப்பார். தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்.  39 நூல்கள் எழுதியிருக்கிறார். இவரது கவிதைகளும் நாவல்களும் இதுவரை 26 இலட்சம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கிறது. சாகித்திய அகாடமி விருது (2003) பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் இந்தியாவின் 22 மொழிகளில் சாகித்திய அகாடமியால் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ , பத்மபூஷண், சாதனா சம்மான் போன்ற விருதுகளை பெற்றவர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மூன்று அரசுப் பல்கலைக் கழகங்களின் பெற்றிருக்கிறார். கௌரவ டாக்டர் பட்டங்களையும்
இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். அறுபதுக்கும்  மேற்பட்டோர் முனைவர் பட்டம்.
இது எல்லாம் சாதாரணமாக கிடைத்ததல்ல. அவரது தமிழுக்கும் சொல்லும் திறத்துக்கும் சொல்லுக்குள் இருக்கும் கருத்துக்கும் கிடைத்த மகுடங்கள்.

இந்தப் புகழையும், பெருமையையும் மூன்று தலைமுறைகளாக தக்க வைத்திருப்பதுதான் பெரும் சாதனை. ஒரு படத்தோடு காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள். 5 புத்தகங்களோடு முடிந்தவர்கள் கதையும் இருக்கிறது. ஆனால், 50 ஆண்டுகளாக இலக்கிய உலகத்தில் இடைவிடாமல் பயணித்துக்கொண்டு இருக்கிறார் நம்முடைய வைரமுத்து. மூன்று தலைமுறை படைப்பாளிகளோடு, மூன்று தலைமுறை இயக்குநர்களோடு, மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களோடு, மூன்று தலைமுறை இளைஞர்களோடு இயங்கிக்கொண்டு இருக்கிறார். இன்னும் பல தலைமுறைகளோடும் அவர் பயணிப்பார். அப்படி ஒரு ஆற்றல் அவரது மொழிக்கு உண்டு.

ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொரு கருத்துக்கு அடிப்படையாக வைத்து படைத்திருக்கிறார். புலம்பெயர் மக்களின் வாழ்வியல் வலியை உணர்த்துகிறது 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஆணாதிக்க சமுதாயத்தில் சுரண்டப்படும் ஓர் உழைக்கும் பெண்ணின் போராட்டம் 'கருவாச்சி காவியம்',
புவிவெப்பமாதல் என்னும் உலகத் துயரத்தில் இந்திய விவசாயி படும் இம்சையை சொல்லி, அதற்கு தீர்வையும் சொல்லும் 'மூன்றாம் உலகப்போர்',
மரணத்தின் விளிம்பில் கூட நம்பிக்கையை முன்வைத்து வாழ்வின் பெருமை பேசும் 'தண்ணீர் தேசம்', நிலம், நீர், காற்று, தீ, வெளி என்ற ஐம்பூதங்கள் பற்றிய ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பான மகா கவிதை.

இப்படி தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொரு விதமாக படைத்தவர் நம்முடைய வைரமுத்து. அதனால்தான் கவிப்பேரரசாக அவர் உயர்ந்து நிற்கிறார். மரபையும் புதுமையையும் இணைத்ததுதான் நம்முடைய வைரமுத்துவின் சாதனை. சங்க இலக்கியத்தையும் சந்தை இலக்கியத்தையும் பிணைத்தவர் அவர். கலையையும், அரசியலையும் சேர்த்தவர் அவர். திரையையும் இலக்கியத்தையும் குழைத்தவர் அவர். தமிழை உலகத்தோடு கொண்டுசென்று புகுத்தியவர். இதன் மூலமாக, மக்கள் நெஞ்சங்களில் நிறைந்தவர். அவர் நூலைப் படிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால், அவர் பாட்டைக் கேட்காத செவிகள் நிச்சயமாக இருக்க முடியாது.

என் வானம் பெரிது என் வேள்வி பெரிது என் தமிழ் பெரிது என் தவம் பெரிது என் தோள்களில் கனக்கும் இலட்சியத்தோடு வந்தேன் என்று சொல்லி அதே இலட்சியத்திற்காக வாழ்பவர் வைரமுத்து. தமிழ்ப் பண்பாட்டு மரபை பொதுவுடைமைக் குறிக்கோளைக் திராவிடச் சிந்தனை மரபை கொண்டவராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதுதான் வைரமுத்துவின் தனித்த சிறப்பு . திரைத்துறையில் வளர்ந்த பிறகு உயர்ந்தபிறகு தேசிய விருதுகளைப் பெற்ற பிறகும் தன்னை திராவிட இயக்கப் படைப்பாளியாக மறக்காமல் மறைக்காமல் அவர் காட்டிக்கொண்டதை பாராட்டுவதற்குதான் நான் வந்தேன்.

என் இளமைக் காலத்திலேயே, தீ வளர்த்துக் கொண்டிருந்த திராவிட யாகத்தில் எனது அடுப்புக்கு நெருப்பு எடுத்துக் கொண்டேன் என்று சொல்லும் துணிச்சல் வைரமுத்துக்கு இருந்தது. பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனையும் புரட்சிக்கவிஞரின் கவிதை வரிகளும் அண்ணாவின் எழுத்தும் தன்னை வார்ப்பித்ததாக அவர் சொல்லி இருக்கிறார். கருணாநிதியின் எழுத்துகளே என் ரத்தத்தைத் துள்ள வைத்திருக்கின்றன. என் நாடி நரம்புகளை வீணையாக்கி வாசித்திருக்கின்றன என்று எல்லா மேடைகளிலும் சொன்னவர் அவர். இந்தக் கொள்கை உரம்தான் அவரை கவனிக்க வைத்தது.

தமிழுக்குப் பெருமை சேர்த்ததால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் திராவிடக் கொள்கைகளுக்கு வலுச்சேர்த்ததால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற வகையிலும் கருணாநிதியை இலக்கிய ஆசானாக ஏற்றுக் கொண்டதால் அவரின் மகன் என்ற பாச உணர்வாலும் நான் விரும்பிக்கேட்கும் பல பாடல்களை தந்தவர் என்பதால் ஒரு ரசிகன் என்ற மகிழ்ச்சியிலும் வைரமுத்துவை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். பொதுவாக 100 ஆண்டு வாழுங்கள்! என்று வாழ்த்துவார்கள். ஆனால், இங்கு இருக்கக்கூடிய நீங்கள் எல்லோரும் வாழ்த்துவதுபோல் நானும். நீங்கள் படைப்பாளி என்பதால், 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்து, உங்கள் பாடல்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகட்டும். படைத்த நூல்களின் எண்ணிக்கை 100 ஆகட்டும் என்று வாழ்த்துகிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement