வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா - வடபழனி முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!
வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று வடபழனி முருகன் கோயிலில் திருத்தேரோட்டம் வெகுசிறப்பாக நடைப்பெற்றது.
வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரமோற்சவ விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருடாவருடம் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் முதல் நாள் ‘துவஜ ரோஹணம்’ எனும் கொடியேற்றத்தில் தொடங்கி மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, காலை சூரிய பிரபை புறப்பாடும், இரவு சந்திர பிரபை புறப்பாடும், ஆட்டுக்கிடா வாகனத்திலும், நாக வாகனத்திலும் சுப்பிரமணியர் வீதிஉலா என ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு நடைப்பெற்றது.
காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வள்ளி தெய்வானையுடன் முருகன் கோயில் மாட வீதிகளில் வீதி உலா வந்தார். இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இத்தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ‘அரோகரா’ எனும் கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதனைத்தொடர்ந்து வைகாசி விசாக நாளான மே 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகர் வீதிஉலா நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு மயில்வாகன புறப்பாடும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளன.
பின்னர், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.