தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள்: உடனடி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ‘உயிரிழந்த கடிதமாக’ இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "உச்சநீதிமன்றத்தின் 2019-ம் ஆண்டு உத்தரவைப் பின்பற்றி தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
அஞ்சலி பரத்வாஜ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ”மத்திய தகவல் ஆணையத்தில் தற்போது 4 தகவல் ஆணையர்கள் மட்டும் பணியாற்றுகிறார்கள். 7 இடங்கள் காலியாக உள்ளன. வரும் மாதங்களில் இந்த 4 ஆணையர்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது” என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ”மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கையையும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் சேகரித்து வழங்க வேண்டும். தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் ’உயிரிழந்த கடிதமாக’ இருக்கும். ஜார்க்கண்ட், திரிபுரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தகவல் ஆணையர்கள் இல்லாத நிலை உள்ளது. பல மாநிலங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையும், இது தொடர்பாக 2019-ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் செல்லாததாக்கும்” என்று தெரிவித்தனர்.