#Uttarpradesh | தினமும் குளிக்காமல் கங்கை நீரை மேலே தெளித்துக்கொண்ட கணவர் - மனைவி எடுத்த அதிரடி முடிவு!
ஆக்ராவில், திருமணமான 40 நாட்களுக்குப் பிறகு, கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் பெண் ஒருவர் திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு விவாகரத்து கோரியதாகக் கூறப்படுகிறது. ஒரு விசித்திரமான சுகாதார பிரச்னை காரணமாக, அந்த பெண்ணின் கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிப்பதாகவும், இதனால் ஏற்படும் பொறுத்துக்கொள்ள முடியாத உடல் துர்நாற்றத்தால் அவரது மனைவி இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். திருமணமாகி 40 நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரான ராஜேஷ், புனிதமானது என்று நம்பப்படும் கங்கை நதியில் (கங்காஜல்) வரும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை தெளித்துக் கொள்கிறார். இவர், திருமணமாகி மனைவியின் வற்புறுத்தலால் 40 நாட்களில் 6 முறை மட்டுமே குளித்துள்ளார். இதனால், ராஜேஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அப்பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மேலும், அப்பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் என காவல்துறையில் பதிவுசெய்து விவாகரத்து கோரியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கணவர் இறுதியில் மனம் திருந்தி, அவரது தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக் கொண்டார். இருப்பினும், அந்த பெண் அவருடன் இனி வாழ விரும்பவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே இத்தம்பதியை ஒரு வாரத்திற்கு கவுன்சிலிங் சென்டருக்கு செல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற ஒரு விசித்திரமான விவாகரத்து வழக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ராவில் பதிவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தில் ஒரு பெண், சிற்றுண்டியான குர்குரே (Kurkure) பாக்கெட் கிடைக்காததால், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரினார். அந்தப் பெண் குர்குரேவிற்கு அடிமையாகிவிட்டதால், தினமும் ரூ.5 குர்குரே வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்பார். இது இருவருக்கும் இடையே சண்டைக்கு வழிவகுத்தது. ஒரு நாள், அவர் குர்குரே வர மறந்துவிட்டார் என அவர் மனைவி விவாகரத்து கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.