#UttarPradesh | கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து!
உலகின் மிகப்பெரிய இந்து சமய நிகழ்வாக மகா கும்பமேளா திகழ்கிறது. இந்த நிகழ்வு உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென எறிந்து மற்ற இடங்களுக்கு வேகமாக பரவியது. தொடர்ந்து, அருகில் உள்ள கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகையினால் அப்பகுதி புகைமூட்டமாகக் காட்சியளித்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்க தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 20 முதல் 25 கூடாரங்கள் தீக்கிரையாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தால் கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் பல, எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.