#Hyderabad போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள்… தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு!
நாட்டிலேயே முதன்முறையாக தெலங்கானா அரசு திருநங்கைகளுக்கான அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத்திட்டத்தை அறிவித்துள்ளது.
ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கான அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது தெலங்கானா அரசு. இந்த திட்டத்தின் கீழ் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த திட்டத்தை மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டவுடன், அவர்கள் ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு உதவ சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களுக்கு தனித்தனியான சீருடைகளை உருவாக்கும் பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கூடுதலாக, பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதற்காக சம்பளம் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகிறது."
இவ்வாறு அரசு அதிகாரி தெரிவித்தார்.