For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!

08:02 AM Nov 25, 2023 IST | Web Editor
உத்தரகாண்ட் சுரங்க விபத்து  மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்
Advertisement

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் இருவழி சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்தது. சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் 13 நாட்களாக சிக்கியுள்ளனர். சுரங்கப் பாதையில் உள்ள தொழிலாளர்கள் மயங்கிவிடாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. உலர் பழங்கள், சத்து மாத்திரைகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் ஆகியவை சிறிய குழாய் மூலம் வழங்கப்பட்டு வந்தன.

அதன்பிறகு, அதிக அளவிலான உணவுகளையும், கைப்பேசி மற்றும் அதற்கான மின்னேற்றிகளையும் அனுப்ப இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள குழாய் செலுத்தப்பட்டது. இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோப்பி கேமரா மூலம் அனைத்து தொழிலாளர்களும் நலமாக இருப்பது வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, இடிபாடுகளில் 60 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. துளையிடும் பாதையில் கடந்த புதன்கிழமை இரவு இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள் சேதமடைந்தன.

இதன் காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இடையூறு ஏற்படுத்திய இரும்புக் கம்பிகள் வியாழக்கிழமை காலை அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள 6 மீட்டர் தொலைவுக்கு குழாயைச் செலுத்த, துளையிடும் பணிகள் வியாழக்கிழமை நண்பகல் மீண்டும் தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கிய சில மணிநேரங்களில் துளையிடும் ‘ஆகர்’ இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், என்டிஎம்ஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், “மீட்புப் பணிகளுக்காக அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை இரவு நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகளில் தற்போதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும். மீட்புப் பணிகளின் நிலவரம் குறித்து ஊகங்களை செய்தி ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இது மிகவும் சவாலான மற்றும் கடுமையான பணி ஆகும்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement