உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு | மகிழ்ச்சியில் இந்தியா!...
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதால் நாடே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொடர் மீட்பு பணிகளின் பயனாக நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்
இதனால் மகிழ்ச்சியில் திளைத்த தொழிலாளர்கள், சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த நாள் தான் தங்களுக்கு தீபாவளி என்று தெரிவித்தனர். மீட்பு பணி தாமதமான போதிலும் நம்பிக்கை இழக்கவில்லை என்று கூறிய அவர்கள், மீட்புக் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களின் உறவினர்கள் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 41 பேருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிக்கிச்சை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மன உறுதிக்கு தேசம் தலை வணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீட்பு குழுவினரின் கடின உழைப்பால் தான் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசிய பிரதமர், அவர்களது மன வலிமையை பாராட்டுவதாக கூறியுள்ளார்.
சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை கேள்விப்பட்டு நிம்மதி அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீட்பு குழுவினரை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.