For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகள் சற்று நேரத்தில் மீண்டும் தொடக்கம்!

10:19 AM Nov 24, 2023 IST | Web Editor
உத்தரகண்ட் சுரங்க விபத்து  மீட்புப் பணிகள் சற்று நேரத்தில் மீண்டும் தொடக்கம்
Advertisement

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்ட நிலையில், ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் இருவழி சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்தது.  சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் 13 நாட்களாக சிக்கிக் கொண்டுள்ளனர்.  சுரங்கப் பாதையில் உள்ள தொழிலாளர்கள் மயங்கிவிடாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.  உலர் பழங்கள், சத்து மாத்திரைகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் ஆகியவை சிறிய குழாய் மூலம் வழங்கப்பட்டு வந்தன.

அதன்பிறகு, அதிக அளவிலான உணவுகளையும், கைப்பேசி மற்றும் அதற்கான மின்னேற்றிகளையும் அனுப்ப இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள குழாய் செலுத்தப்பட்டது.  இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோப்பி கேமரா மூலம் அனைத்து தொழிலாளர்களும் நலமாக இருப்பது வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.  இதனிடையே, இடிபாடுகளில் 60 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.  துளையிடும் பாதையில் கடந்த புதன்கிழமை இரவு இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள் சேதமடைந்தன.

இதன் காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.  இடையூறு ஏற்படுத்திய இரும்புக் கம்பிகள் வியாழக்கிழமை காலை அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள 6 மீட்டர் தொலைவுக்கு குழாயைச் செலுத்த, துளையிடும் பணிகள் வியாழக்கிழமை நண்பகல் மீண்டும் தொடங்கப்பட்டது. பாதையில் வேறெந்த புதிய இடையூறுகளும் இல்லாத சூழலில் இந்தப் பணிகள் 12 முதல் 14 மணிநேரத்தில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், துளையிடும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் தளத்தில் வியாழக்கிழமை இரவு விரிசல் ஏற்பட்டதால் துளையிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதையும் படியுங்கள்: “மன்னிப்பு கேட்ட கவுதம் வாசுதேவ் மேனன் ” – ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்த நிலையில், நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் நிலைமை ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வெள்ளிக்கிழமை அதிகாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.  அதனால்தான் நாங்கள் ஒரு ட்ரோன் மூலம் அவர்களின் நிலைமையை கண்காணித்து வருகிறோம். சமீபத்திய தொழில்நுட்பத்தில் சுரங்கப்பாதைகளுக்குள் ட்ரோன்கள் செலுத்தப்பட்டு நிலைமைகளை கண்காணித்து தகவல்களை பெறமுடிகிறது. இந்த ட்ரோன்கள் ஜிபிஎஸ் மறுக்கப்பட்ட பகுதிகளிலும் செல்லக்கூடியது. இதுபோன்ற பேரழிவுகளில் இதுபோன்ற ட்ரோன்கள்
பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

சுரங்கப்பாதைக்குள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ட்ரோன் கேமராக்கள் மூலம் தங்கள் குழு கண்காணித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.  மேலும், 41 பேரையும் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே கொண்டு வருவதே எங்களின் முக்கிய இலக்காகும். அவர்கள் விரைவில் பத்திரமாக வெளியே கொண்டு வரப்படுவார்கள் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.  அசோசியேட் லீட் மைனிங் பொறியாளர் ஆசிஃப்முல்லா கூறுகையில்,  இந்த ட்ரோன் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது என்றும் நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

"மீட்பு குழுவினருக்கு உதவுவதற்காக பெங்களூருவில் இருந்து இங்கு வந்துள்ளோம். துளையிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.  நாங்கள் அனைவரும் சுரங்கப்பாதையில் இருந்து அவர்களை மீட்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.  இதற்கிடையில், சுரங்கப்பாதைக்குள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு, கிச்சடி மற்றும் பால் உருளை பாட்டில்களில் காலை உணவாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், என்டிஆர்எஃப் இயக்குநர் அதுல் கர்வால் ஆகியோர் சம்பவ இடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் உரையாடிய முதல்வர் தாமி, அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

Tags :
Advertisement