உத்தரகண்ட் சுரங்க விபத்து: இதுவரை 20 மீட்டர் துளையிட்டுள்ள மீட்புப் படை!
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கு சுரங்கத்தின் மீதிருந்து செங்குத்தாக துளையிடும் பணி இதுவரை 20 மீட்டர் அளவுக்கு முடிவடைந்திருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்டில் உத்தர்காசி அருகே சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவால், 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சுரங்கத்தில் மேலிருந்து தோண்டும் பணி தொடங்கியுள்ளது.
தொழிலாளர்களை மீட்க மேலிருந்து 86 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில், இதுவரை 20 மீட்டர் தூரம் துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் கிடைமட்டமாக குழாயை உள்ளே செலுத்தும் பணி முடங்கியதால் செங்குத்தாக 86மீட்டருக்கு குழாயை செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் 15 நாட்களுக்கும் மேலாக நீளுவதால் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கவலையடைந்துள்ளனர்.