#Uttarakhand | பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 23 பேர் பலி!
உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று (நவ.4) காலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மொத்தமாக 23 பேர் உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு ராம்நகரில் உள்ள மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"அல்மோரா மாவட்டத்தின் மார்சுலாவில் நடந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரிழப்புகள் குறித்த மிகவும் சோகமான செய்தி கிடைத்தது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல விரைவாக செயல்பட்டு வருகின்றனர். தேவைப்பட்டால், பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன."
இவ்வாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி குறிப்பிட்டுள்ளார்.