உத்தரகண்ட் பனிச்சரிவு - 50 தொழிலாளர்கள் மீட்பு, 4 பேர் உயிரிழப்பு!
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமம் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா-திபெத் எல்லையில் 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி கிராமமாகும். இக்கிராமத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6 வரை தீடிரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஏற்கெனவே அப்பகுதியில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
பனிச்சரிவின்போது ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பணி செய்து வந்த 55 தொழிலாளர்கள் சிக்கினர். தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, அதன் பின்பு தொடங்கப்பட்டது. மேலும் அங்கு 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் இணைந்தனர்.
மீட்புப் பணியினரின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, பனிச்சரிவில் சிக்கியிருந்த 50 தொழிலாளர்களை மீட்டனர். இதில் சிலருக்கு சிகிச்சையளிக்கப்ப்ட்டு வந்த நிலையில், அதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து எஞ்சியிருக்கும் 5 பேரை மீட்பதில் மீட்புப் பணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.