“நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை!” - மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்!
நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4.53 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,
“நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் கிழமை நீதிமன்றங்களில் 4,53,51,913 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 60,11,678 வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும் 14,89,128 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், நாட்டில் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் கொண்ட முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் மாநிலம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் 1.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும் நிலுவையில் உள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 11-வது இடம் எனவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.