டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு...
உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9வது சர்வதேச ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த போட்டிகளில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அமெரிக்காவில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஐசிசி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இதற்காக சிறப்பு மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுகிறார். 2008ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கங்கள் வென்று அவர் சாதனை படைத்துள்ளார். அதேபோல் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயங்களில் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.58 நொடிகள், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 19.19 நொடிகள் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் 36.84 நொடிகள் என அவர் பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார். தற்போது அவர் இந்த தொடரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருப்பதால், அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இந்த போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.