அமெரிக்கா ஒலிம்பிக் 2028 - ஆறு கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி!
நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறாத கிரிக்கெட், பாரிஸ் ஒலிம்பிக்கில் 1900 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல் விலக்கி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் உட்பட ஐந்து புதிய விளையாட்டுகள் கடந்தாண்டு சேர்க்கப்பட்டது. மேலும் டி20 வடிவில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐசிசியில் முழுநேர உறுப்பினராக 12 அணிகள் இருக்கும் நிலையில், 6 அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. அதன்படி ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆறு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு பாலினத்திற்கும் மொத்தம் 90 வீரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 15 பேர் இடம்பெறவுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அமெரிக்க தனது அணியை அறிமுகப்படுத்தினால், மீதமுள்ள 5 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இந்த அணிகள் தேர்வு முறைகள் குறித்து தற்போது எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.