அமெரிக்கா : சான் பிரான்சிஸ்கோவில் நடமாடும் வீடுகளுக்கு தடை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சுமார் 8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சான் பிரான்சிஸ்கோ நகரில் சொந்த வீடு இல்லாத மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு குடியேறுகின்றனர். ஆனால் வீட்டு வாடகை அதிகமாக இருப்பதன் காரணமாகவும், மக்கள் சிரமபடுவதாக கூறப்படுகிறது. மேலும் வீடுகள் எளிதில் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பலரும் வாகனங்களிலேயே வீடு போன்ற வசதியை உருவாக்கி அதில் குடியேறி வருகின்றனர். இந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டு நடமாடும் வீடு போல செயல்படுத்தபடுகிறது. அதேசமயம் இந்த நடமாடும் வீடுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது போன்ற வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடைபாதைகளை சுத்தமாக வைத்திருக்க சான் பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே இதுபோன்ற நடமாடும் வீடுகளில் மக்கள் வசிக்க தடை விதிக்கவும், வாகன நிறுத்த விதிமுறைகளை அமல்படுத்தவும் உள்ளூர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் நடமாடும் வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடத்தக்கது.