#USA: கமலா ஹாரிஸுக்கு புகழாரம் சூட்டிய ஜோ பைடன்!
வரலாறு போற்றும் அதிபராக கமலா ஹாரிஸ் திகழ்வார் என தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், பல காரணங்களால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.
இதனையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் போட்டியில் வந்ததிலிருந்தே, அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கருத்துக் கணிப்புகளும் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாகவே வருகின்றன.
இந்நிலையில் கமலா ஹாரிஸ் வரலாறு போற்றும் அதிபராக இருப்பார் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டின் முதல் நாளில் ஜோ பைடன் பேசியதாவது;
அமெரிக்காவின் அடுத்த அதிபராக கமலா ஹாரிஸைத் தேர்ந்தெடுக்க அனைவரும் தயாராக வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அதிபராக அவர் இருப்பார். காரணம், இப்போதே அவர் மீது உலகத் தலைவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.
நம் அனைவரையும் பெருமை கொள்ளவைக்கும் அதிபராகவும், வரலாறு போற்றும் அதிபராகவும் அவர் திகழ்வார். அமெரிக்காவின் ஜனநாயகத்தை அழிவிலிருந்து பாதுகாக்க, டொனால்ட் டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும். அதற்கு, கமலா ஹாரிஸை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
பெண்களின் அதிகாரம் என்றால் என்ன என்பதை டிரம்ப் இந்த 2024-ஆம் ஆண்டில் தெரிந்து கொள்வார். டிரம்பிடமிருந்து 2020-ஆம் ஆண்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தோம். தற்போது மீண்டும் 2024-ஆம் ஆண்டில் அவரிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். இத்தேர்தலில் நாம் எடுக்கும் முடிவுதான் நாட்டின் எதிர்காலத்தை மட்டுமின்றி, உலகின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்” எனப் பேசினார்.