For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவு - மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம்!

08:12 AM Aug 04, 2024 IST | Web Editor
அமெரிக்க போர் கப்பல்கள்  விமானங்கள் விரைவு   மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம்
Advertisement

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். ஜூலை 31ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் வெளியானது.

ஈரான் ராணுவம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘7 கிலோ எடையுள்ள குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்மாயில், ஈரானுக்கு வரும்போதெல்லாம், ஈரான் ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள இதே விருந்தினர் மாளிகையில்தான் தங்குவார். ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த இஸ்மாயில் இங்குதான் தங்கியிருந்தார்.

அவரை அப்போதே படுகொலை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இப்ராகிம் ரைசி இறுதிச்சடங்கில் பங்கேற்க ஏராளமான கூட்டம் திரண்டிருந்ததால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டு, கடந்த 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாத், தனது ஈரான் உளவாளிகள் மூலம் இந்த தாக்குதலை நடத்தி யிருக்கலாம் என கூறப்படுகிறது.

பழிவாங்கும் நடவடிக்கை சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விதத்தில் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்படும். இஸ்மாயில் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பது குற்றச்செயல். இஸ்ரேல் அனைவரையும் சண்டைக்கு இழுக்கிறது. எனவே இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்படலாம்’’ என ஹிஸ்புல்லா தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவும் சூசகமாக தெரிவித்திருந்தார். காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளும் இஸ்ரேலுக்கு எதிரான ஒருங்கிணைந்த தாக்குதலில் ஈடுபடலாம்.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் தங்கியிருந்த ராணுவ அதிகாரிகள் மீது இஸ்ரேல் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி விமான தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி 300 ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவை அனைத்தையும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இஸ்ரேலிய படைகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் உறுதி:

 அதேபோன்ற பாதுகாப்பை இஸ்ரேலுக்கு தற்போது வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போனில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், ‘‘அச்சுறுத்தலுக்கு எதிராக, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்க கடற்படையில் உள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை, ஓமன் வளைகுடா பகுதிக்கு செல்ல அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். ஓமன் வளைகுடா பகுதியில் ஏற்கெனவே யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட இதர போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

மேலும், போர் விமானங்கள் படைப்பிரிவு, ஏவுகணைகள் வீசும் போர்க்கப்பல்கள் ஆகியவற்றையும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு செல்ல அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உத்தரவிட்டுள்ளது. காசா மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலை பாதுகாக்க, அமெரிக்க படைகள் தற்போது மிகப் பெரியளவில் அனுப்பப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : “வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள்” – கேரள அரசு அறிவிப்பு!

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, ‘‘ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் தெளிவாக அறிவித்துள்ளார். அவர்கள் இஸ்ரேல் மீது மற்றொரு தாக்குதல் நடத்த விரும்புகிறார்கள். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags :
Advertisement