அமெரிக்கா இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது - மத்திய அரசு கண்டனம்!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவை அமெரிக்கா குறிவைப்பது நியாயமற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனால் இந்தியாவை குறி வைப்பது நியாயமற்றது. வழக்கமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் ஐரோப்பாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யத்தொடங்கின. அதேபோல் போர் தொடங்கியபோது ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஆதரித்தது.
இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் நோக்கம் இந்திய நுகர்வோர்கள் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் பெறுவதை உறுதி செய்யவதே ஆகும். இந்தியாவை விமர்சனம் செய்யும் நாடுகளும் ரஷியாவிடம் வர்த்தகம் செய்கின்றன. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மட்டுமின்றி உரம், கனிம பொருட்கள் வேதிப்பொருட்கள், இரும்பு, எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. அமெரிக்காவும் ரஷியாவிடமிருந்து அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம், மின்சார கார் உற்பத்திக்கு தேவையான பலோடியம், உரங்கள், வேதிப்பொருட்களை கொள்முதல் செய்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவை அமெரிக்கா குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற பொருளாதார நாடுகளை போலவே இந்தியாவும் அதன் தேசிய, பொருளாதார நலன்களை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.