நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபடும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் #DonaldTrump - #KamalaHarris!
டொனால்ட் டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் அதிரடியாக பல வாக்குறுதிகள் இருவரும் மாறி மாறி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேட்பாளா்களான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், இந்திய வம்சாவளியைச் சர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் செவ்வாய் இரவு 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி புதன் காலை 6.30 மணி) நடைபெறுவதாகவும், இந்த விவாதம் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகரில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப்பை எலான் மஸ்க் கடந்த ஆக. 13-ம் தேதி நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேஸில் நடைபெற்றது. அதில் பல கேள்விகளுக்கு டிரம்ப் பதிலளித்தார். அப்போது பேசிய அவர்“கமலா ஹாரிஸ் அமெரிக்காவை அழித்து விடுவார். அவரைத் தேர்ந்தெடுத்தால் நாட்டில் வணிகம் இல்லாமல் போய்விடும்” போன்ற கருத்துகளை முன்வைத்தார். தொடர்ந்து, ‘கமலா ஹாரிஸை எக்ஸ் ஸ்பேஸில் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சி’ என எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், டிரம்ப் இருவருக்கும் இடையே கடந்த ஜூன் 27-ம் தேதி நடைபெற்ற அதிபர் தர்தல் நேரடி விவாதத்தின்போது பைடன் மிகவும் தடுமாறியதால் அவர் போட்டியிலிருந்து விலக நேரிட்டது. இந்நிலையில், டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.