வெள்ளை மாளிகையில் விருந்தில் கலந்து கொண்ட ரொனால்டோ - நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்...!
அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. ஆனால் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட பின்னர் இரு நாட்டு உறவுகளுக்கு இடையே விரிசல் விழுந்தது. இந்த நிலையில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று இரவு (செவ்வாய்) வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப், முகமது பின் சல்மானுக்காக விருந்து ஒன்றை நடத்தினார். அவ்விருந்தில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ, செவ்ரான் தலைமை நிர்வாகி மைக் விர்த், பிளாக்ஸ்டோன் இணை நிறுவனர் ஸ்டீபன் ஏ ஸ்வார்ஸ்மேன், ஜெனரல் மோட்டார்ஸ் தலைமை நிர்வாகி மேரி பார்ரா, ஃபோர்டு மோட்டார் நிர்வாகத் தலைவர் வில்லியம் கிளே ஃபோர்டு ஜூனியர், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் என பலரும் பங்கேற்றனர். மேலும் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தினர் முன் பேசிய டிரம்ப், ”இவ்விருந்தில் ஐந்து முறை பாலன் டி'ஓர் விருதை வென்ற ரொனால்டோ கலந்து கொண்டதற்கு நன்றி. எனது மகன் பாரன் டிரம்ப் ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகன். பரோன் ரொனால்டோவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நான் உங்களை (ரொனால்டோ) அறிமுகப்படுத்தியதால், என் மகன் என் மீது வைத்திருக்கும் மதிப்பு உயரும் என்று நினைக்கிறேன். எனவே மிக்க நன்றி” என்று கூறினார்.
கிரிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவென்டஸ் போன்ற சிறந்த கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். மேலும் போர்ச்சிகல் தேசிய அணிக்கு தலைமை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
போர்ச்சுகல் அணி 2016 ஆம் ஆண்டு UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வென்றதில் ரொனால்டோ முக்கிய பங்காற்றினார். மேலும் அவர் ஐந்து பாலன் டி'ஓர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் தன் வசப்படுத்தியுள்ளார். ரோனால்டோ சமீபத்தில் சவுதி கிளப் அல்-நாசருடன் ஒப்பந்தம் செய்தார். அடுத்தாண்டில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட இடங்களில் ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தத் தொடர்தான் தனது கடைசி தொடராக இருக்கும் என்று டொனால்டோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.