சென்னை நீர்வள மேலாண்மையில் அமெரிக்காவின் ஃபெமா, சான் அன்டோனியோ ஆணைய உதவி!
நீர்வள மேலாண்மையில் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும், ஆதரவளிக்கவும் அமெரிக்காவின் ஃபெமா (FEMA) மற்றும் சான் அன்டோனியோ நதி ஆணைய அதிகாரிகள் தமிழ்நாடு வந்தனர். நீர்வள மேலாண்மை தொடர்பாக சென்னை மேயர் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர். இந்த கலந்துரையாடலில் நதி உறுதித்தன்மை, நீர் சிக்கல்கள் மற்றும் காலநிலை மாற்ற சவால்கள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அமெரிக்க வெளியுறவு மற்றும் உள்துறைகளின் முன்முயற்சியான தூதரின் நீர் நிபுணர் திட்டத்தின் (AWEP) கீழ் பயணிக்கும் இரு நபர் குழு, அமெரிக்க துணைத் தூதரகத்தின் அழைப்பின் பேரில் ஜனவரி 2 முதல் 13 வரை சென்னை வந்திருந்து, நீர்வள சவால்கள், பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் உரையாடினர்.
சான் அன்டோனியோ நதி ஆணையத்தின் (SARA) நீர்வள இயக்குநர் ஸ்டீவன் மெட்ஸ்லர் மற்றும் அமெரிக்காவின் மத்திய அவசரநிலை மேலாண்மை அமைப்பு (FEMA) மண்டலம் 5 தணிப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜூலியா மெக்கார்த்தி ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தைப் பார்வையிட்டனர்.
சென்னை ஐஐடியில் நடந்த சாஸ்த்ரா தொழில்நுட்ப விழாவின் போது எதிர்கால நகரங்கள் குறித்த உச்சி மாநாட்டின் சுவாரசியமான உரையாடல் ஒன்றில் பங்கேற்ற இரு நிபுணர்களும், இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து (CII) வணிக பங்குதாரர்களைச் சந்தித்தனர். அடையாறு நதியில் கதைசொல்லல் சுற்றுப்பயணத்தை அவர்கள் மேற்கொண்டதோடு உமேஜின் 2025 நிகழ்வில் "காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதுமையான தீர்வுகள்: ஒரு உலகளாவிய பார்வை" என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் நிபுணத்துவத்தை வழங்கினர்.
சென்னை மேயர் பிரியா, தமிழ்நாடு நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் டி. கார்த்திகேயன், மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோருடனும் இந்தக் குழு கலந்துரையாடல்களை நடத்தியது.
சான் அன்டோனியோ நதி ஆணையத்தின் நீர்வள இயக்குநர் ஸ்டீவன் மெட்ஸ்லர் கூறுகையில், “எனது இந்திய சகாக்களும், நானும் சக ஊழியர்களாகவும் நண்பர்களாகவும் மாறிவிட்டோம். எனது சொந்த ஊரான சான் அன்டோனியோவின் சகோதரி நகரமான சென்னையில் நீர்வள பொறியியலில் எனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வது மிகவும் பொருத்தமானது.
சென்னை மற்றும் அதன் சகோதரி நகரமாக திகழும் எனது சொந்த ஊரான சான் அன்டோனியோவில் ஓடும் ஆறுகள் இந்த துடிப்பான மற்றும் சிறந்த நகரங்களின் வரலாறு, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, வாய்ப்புகளையும் சவால்களையும் வழங்குகின்றன. நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான ஒரு தனித்துவமான வழியாக இந்தத் திட்டம் விளங்குகிறது,” என்றார்.
ஃபெமா பிராந்தியம் 5 தணிப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜூலியா மெக்கார்த்தி கூறுகையில், “தூதரின் நீர் நிபுணர்கள் திட்டத்தின் மூலம் வெள்ள அபாயத்தை அடையாளம் காண்பது, மேலாண்மை மற்றும் தணிப்பு ஆகியவற்றில் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நகரம் மற்றும் அதன் மக்களின் நலனுக்கு வெள்ளப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. சவால்கள் இருந்தாலும், நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சாத்தியமான தீர்வுகளும் உள்ளன. இவை குறித்து மாநில அரசு மற்றும் மாநகராட்சி உடன் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்றார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் கூறுகையில், “நதி மறுசீரமைப்பு, பயனுள்ள கழிவுநீர் மேலாண்மை, வெள்ளத் தணிப்பு மற்றும் பேரிடர் மீள்தன்மை ஆகியவற்றில் தமிழக அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை அமெரிக்கா ஒரு கூட்டாளியாகவும் நண்பராகவும் ஆதரிக்கிறது. சென்னை வந்திருந்த நிபுணர்களின் மூலம் அமெரிக்க தொழில்நுட்ப நிபுணத்துவம், வணிக கூட்டாண்மை மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் தமிழ்நாட்டுடன் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கான அளவிடக்கூடிய திட்டத்தை சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் வகுத்துள்ளது.
இத்திட்டம் டெக்சாஸில் உள்ள சான் அன்டோனியோவிற்கும், சென்னைக்கும் இடையிலான சகோதரி நகர கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் திறக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பிற நகரங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இது செயல்படக்கூடும்,” என்றார்.