திருப்பதி கோயில் உண்டியலில் தொடர்ந்து கைவரிசை காட்டிய ஊழியர்: ரூ.150 கோடிக்கு சொத்து சேர்த்தது அம்பலம்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான ஊழியர் ஒருவர், காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை திருடிய சம்பவம் பக்தா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின், உண்டியலில் காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். அந்த தொகையில் வெளிநாட்டு பக்தர்கள் செலுத்திய பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் இருக்கும். இந்நிலையில், திருமலை ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிக்குமார் தேவஸ்தான ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
காணிக்கை எண்ணும்போது, பல ஆண்டுகளாக வெளிநாட்டு டாலர்களை ரவிக்குமார் திருடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமாரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தனர்.
அதில் ரவிக்குமார் காணிக்கை திருடுவதைப் பார்த்த விஜிலென்ஸ் அதிகாரிகள், வெளியில் வந்த ரவிக்குமாரை பிடித்து தீவிர சோதனைக்கு உள்படுத்தினர். அதில், அவர் தன்னுடைய ஆசன வாயில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலர்களை திருடி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மீது விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பல ஆண்டுகளாக அவர் இதேபோல் நாள்தோறும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் அமெரிக்க டாலர்களை திருடி ஆசன வாயில் மறைத்து கொண்டு சென்றதும், அந்த பணத்தில் ஆந்திரா, தமிழ்நாட்டில் ரூ.150 கோடிக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ளது தெரிந்தது.
இதுபற்றி அறிந்த தேவஸ்தான நிர்வாகம், உண்டியல் காணிக்கை விவகாரம் வெளியில் தெரிந்தால் அவப்பெயர் ஏற்பட்டு கோயில் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடும் என்று கருதி இந்த வழக்கை லோக் அதாலத்துக்கு கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து, சமரசம் பேசி ரவிக்குமார் திருடி வாங்கிக் குவித்த சொத்துகளில் ஒரு பகுதியை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர்.
இதையும் படியுங்கள் : மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு…கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் மேலும் சில ரயில்கள் ரத்து!
இந்த முடிவுக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்தது. ஆனால் இது குறித்து அறங்காவலர் குழுவினர் ரகசியம் காத்தனர். மேலும், ரவிக்குமாரின் சொத்துகளில் ஒரு பகுதியை நன்கொடையாக எழுதி வாங்கிய நிலையில், மேலும் பல கோடி சொத்துகளை காவல்துறையினர் மற்றும் கடந்த ஆட்சியில் இருந்த செயல் அதிகாரி தா்மா ரெட்டி ஆகியோர் தங்களுடைய உறவினர்களின் பெயர்களில் எழுதி வாங்கிக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், மீண்டும் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேவஸ்தான ஊழியர் ஒருவரே, காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை திருடிய சம்பவம் பக்தா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.