பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து... டிரம்பின் உத்தரவுக்கு தடைவிதித்த அமெரிக்க நீதிமன்றம்!
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக, பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.
டிரம்பின் இந்த உத்தரவு மற்ற உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி அமெரிக்காவில் உள்ள பெற்றோர் இருவரும் குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமையோ இல்லதாவர்களாக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்படும். அதிபர் டிரம்ப் பிறப்பித்த இந்த உத்தரவு பிப்.,19 ல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி டிரம்பின் பல உத்தரவுகளும் உலக நாடுகளிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டிரம்ப்பின் இந்த உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 மாகாண அரசுகள் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க சியாட்டில் நீதிமன்றம் டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும், இது ஒரு வெளிப்படையான அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான உத்தரவு என்று விமர்சித்த நீதிபதி ஜான் கோஹனூர், தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருப்பதாகவும், இப்படியொரு அரசியலமைப்பு முரணான வழக்கை பார்த்ததாக நினைவு இல்லை என்றும் தெரிவித்தார். அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் டிரம்பின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறி இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.