For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அப்செட்டுகள்!

10:25 PM Nov 13, 2023 IST | Web Editor
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அப்செட்டுகள்
Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றுகள் முடிவுற்று நாக் அவுட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு நிகழ்ந்த அப்செட்டுகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

Advertisement

உலக அளவில் எத்தனையோ விளையாட்டுகள் இருப்பினும், கிரிக்கெட்டின் மீதான கவனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முழு முக்கிய காரணமாக இருப்பது ரசிகர்கள் தான். இரு அணிகள் களமிறங்கும் போது, வெற்றி தோல்வியானது சம்மந்தப்பட்ட அணிகளின் வீரர்களை சார்ந்தது என்பதை தாண்டி, அந்தந்த நாட்டு ரசிகர்களின் எமோஷனாகவே பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த ரசிகர்களின் ஆதரவு மட்டுமே, கிரிக்கெட் விளையாட்டை இன்றும் உயிர்பித்துக் கொண்டிருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்து நாக் அவுட் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தான் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, நடப்பு உலகக் கோப்பை தொடரானது 1 மில்லியன் ரசிகர்களை பதிவு செய்துள்ளது. ஐசிசி நடத்திய கிரிக்கெட் தொடர்கள் வரலாற்றிலேயே, அதிகபட்ச ரசிகர்கள் வருகை புரிந்த ஒரு தொடராக இந்த தொடர் உருவெடுத்திருக்கிறது. 

இவ்வாறு ரசிகர்களின் ஆதரவுடன் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை தொடரில், ரசிகர்களுக்கே அப்சட் கொடுத்த சில தருணங்கள் தான் கூடுதல் ஹைலைட்டே... புள்ளிபட்டியலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும், ரசிகர்களுக்கு இது கலப்பு வகையான உணர்வுகளை கொடுத்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் செயல்பாடு, கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நல்ல பந்துவீச்சாளர்களை கொண்டிருந்த பாகிஸ்தானின் ஃபெய்லியர்களும், 1996 உலகக் கோப்பை வெற்றியாளர்களான இலங்கை அணியின் படுதோல்விகள் என அனைத்தும் ரசிகர்களை கலங்க படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயம் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என மூன்று உலகச் சாம்பியன்களையும் அதிரடியாக வீழ்த்தி, தனது மூன்றாவது உலகக் கோப்பை தொடரிலேயே மாஸ் காட்டியது ஆப்கானிஸ்தான். 2003 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பைகளில் விளையாடிய நெதர்லாந்து அணி நடப்பு ஆண்டு தொடரில் தகுதி பெற்றதோடு, தங்கள் பங்கிற்கு தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி அசத்தியது. ஒரு பக்கம் பெரிய அணிகளின் தோல்விகள் அந்த அணிகளின் ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தினாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளின் வெற்றிகள் அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றது.

நடப்பு உலகக் கோப்பைக்கு முன்னதாக டாப் 4 அணிகளின் லிஸ்டில் இருந்த இங்கிலாந்து அணி, விளையாடிய 9 போட்டிகளில் 3 இல் மட்டுமே வெற்றியும், 6 ல் தோல்வியையும் பதிவு செய்து 7 ஆம் இடம் பிடித்தது. 2025 இல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காவது தகுதி பெற்று விடுமா என்று சிக்கலில் இருந்த இங்கிலாந்து, இக்கட்டான சூழலில் ஒருவழியாக தகுதிப் பெற்றது. ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கேப்டன் ஜோஸ் பட்லர், எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது, எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறியது அவரை மட்டுமல்ல இங்கிலாந்து ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதே போல படு மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிரான மறக்கப்படவேண்டிய தோல்விக்கு பின்னர் பல அரசியல் தலையீடுகளால், நிர்வாகம் கலைந்தது முதல் ஐசிசியின் விதிமீறல் தண்டனை வரை என பல பிரச்னைகளை சந்திக்க நேர்ந்திருக்கிறது. இவைகளெல்லாம் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்திராத ஒன்றாகும். எனவேதான் நடப்பு உலகக் கோப்பை, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. பிசிசிஐ தரப்பில், டிக்கெட் விற்பனையில் குளறுபடி என்னும் குற்றச்சாட்டு வைத்த ரசிகர்களுக்கு, இந்தியா அல்லாத பல போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சில இடங்களில் கிடைக்கவில்லை. இதனால் வெளிநாட்டினர்களின் வரத்தும் குறைந்தது வண்ணமே காணப்பட்டது. ஆக மொத்தம் இந்த உலக கோப்பை ரசிகர்களுக்கு கலப்படமான உணர்வையும், ஃபேவரெட் அணிகளின் பெய்லியர்களும் நிறைந்ததாகவே இருந்துள்ளது.

ஆனால் இந்திய ரசிகர்களுக்கு இது ஒரு சூப்பர் டூப்பர் உலகக் கோப்பை தொடர்தான். 9 போட்டிகளில் வெற்றி பெற்று, அரையிறுதியில் நுழைந்திருக்கும் இந்திய அணி நியூசிலாந்தை சந்திப்பது தான் இந்தியர்களின் இதயங்களை வழக்கத்திற்கு மாறாக துடிக்கச் செய்கிறது. கடந்த 20 வருடங்களில் நியூசிலாந்தை வீழ்த்தாத இந்தியா, நடப்பு தொடரின் லீக் போட்டியில் வீழ்த்தி இருந்தாலும், நியூசிலாந்து அணி என்றாலே உலகக் கோப்பைகளில் இந்தியாவுக்கு ஒரு ரெட் அலர்ட் தான். 2019 உலகக் கோப்பை நினைவிருக்கிறதா?.. எனவே நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, மூன்றாவது உலக கோப்பையை கைப்பற்றினால் மட்டுமே இந்தியர்களுக்காவது இது அப்செட் இல்லாத தொடராக அமையக்கூடும். இந்த நம்பிக்கையில் தான் இந்திய ரசிகர்கள் அனைவரும் ஜெய் ஹோ பாடலுக்கு ஒத்திகை பார்த்து வருகின்றனர். முடிவுகளுக்காக காத்திருப்போம்....

Tags :
Advertisement