யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜிநாமா!
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீரென்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தகைய யுபிஎஸ்சியின் தலைவராக இருந்தவர் மனோஜ் சோனி. இவர் குஜராத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.
கடந்த 2017 ம் ஆண்டு யுபிஎஸ்சி உறுப்பினராக மனோஜ் சோனி பொறுப்பேற்றார். அதன்பிறகு 2023 மே மாதம் 16ம் தேதி அவர் யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக இவர் குஜராத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றினார். மகாராஜா சாயஜிராவ் பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரையிலும், பின்னர் பாபாசாஹேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2015 வரையிலும் மனோஜ் சோனி துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், மனோஜ் சோனி திடீரென்று யுபிஎஸ்சி தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யுபிஎஸ்சி தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார். இவரது பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது. 2029ம் ஆண்டு வரை மனோஜ் சோனியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.