மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் UPI பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சம் - அமலுக்கு வந்தது புதிய விதிமுறை!
யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையையே பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யுபிஐ செயலிகளின் நிறுவனங்களுக்கும், பயனாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை நேற்று (ஜனவரி 1) முதல் ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிக்களை செயலிழக்கச் செய்ய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண மோசடிகளை தடுக்க ரூ.2000-க்கு மேல் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனையின் உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. யுபிஐ மூலம் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். யுபிஐ வேலட் அல்லது ப்ரீபெய்டு பேமெண்ட் கருவி மூலம் ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள் : பிரதமர் மோடியிடம் தங்கப் பதக்கம் பெற்ற நியூஸ்7 தமிழ் ஊழியர்!
மேலும், ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் இணைந்து யுபிஐ ஏடிஎம்களை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இங்கு ‘க்யூஆர் கோட்’-ஐ ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.