ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஏடிஎம் இயந்திரங்களில் UPI வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் அனுப்ப உதவுகின்றன. அதுபோல சாதாரண டீக்கடையில் தொடங்கி மிகப் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் ‘க்யூஆர் கோடு’ மூலமாக பணம் அனுப்பும் முறையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 2024-25 நிதியாண்டின் முதலாவது நாணயக் கொள்கைக் கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஏடிஎம் இயந்திரங்களில் டெபிட் அட்டையை பயன்படுத்தி மக்கள் பணம் டெபாசிட் செய்கின்றனர்.
இதற்கு பதிலாக ஏடிஎம் அட்டை இல்லாமல், ஏடிஎம் இயந்திரங்களில் யுபிஐ மூலமாக டெபாசிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மிக விரைவில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த புதிய UPI வசதியை ATM இயந்திரங்களில் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.