உத்தரபிரதேசம் | ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் கோயில் படிக்கிணறில் மர்ம சுரங்கம் கண்டுபிடிப்பு!
உ.பி. சம்பாலில் உள்ள சந்தௌசியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு பழங்கால சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
உ.பி. மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள கோயிலின் படிக்கிணறை ஆய்வு செய்தபோது, அதற்குள் ஒரு மிகப் பிரமாண்டமான சுரங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தௌசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப்பெரிய படிக்கிணறும், அதற்குள் சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது 1957ல் பயன்படுத்தப்பட்ட மிகப் பிரமாண்டமான சுரங்கம் என தெரியவந்தது.
இந்த சுரங்கப்பாதை பாங்கே பிஹாரி கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அதன் கட்டுமானம் மற்றும் அமைப்பு பழமையானதாகவும் அதன் இருபுறமும் பல அறைகள் போன்ற கட்டமைப்புகளும் காணப்பட்டன. இந்த அறைகளின் நோக்கம் பற்றி தெரியவில்லை. இந்த சுரங்கமானது 400 சதுர மீட்டர் அளவுக்குக் கட்டப்பட்டுள்ளது எனவும், இதில் ஒரு சில தளங்கள் மார்பள் கற்களால் கட்டப்பட்டுள்ளது என்றும் சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்கமானது பிலாரி மன்னரின் தாத்தா காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், தற்போது 210 சதுர மீட்டர் வரை வெளியிலும், மற்றப் பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு உள்ளதாக இருக்கிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக அகழாய்வுப் பணிகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே, சம்பலில் கல்கி விஷ்ணு கோயிலில் தொல்லியல் துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இந்தப் பகுதியில், ஏற்கனவே 5 கோயில்கள் மற்றும் 19 கிணறுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.