உத்தரப்பிரதேச கோண்டா ரயில் விபத்து - உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
உத்தரப்பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகரிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி சண்டிகர்- திப்ரூகர் விரைவு ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இது உத்தரப் பிரதேசத்தின் கோண்டா பகுதியில் கோங்கா - ஜிலாஹி இடையே பிற்பகல் 2.35 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. விபத்தையடுத்து உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். தொடர்ந்து விபத்து குறித்து மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலையடுத்து 40 பேர் கொண்ட மருத்துவக்குழுவும், 15 ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்த விபத்தில் தற்போதுவரை 20 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.