உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம்! - அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?
உத்தரப்பிரதேச ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததே கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று (ஜூலை 2) நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்டமாக 27 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஹத்ராஸ், எடா மாவட்டங்களின் எல்லைப் பகுதியான புல்ராய் கிராமத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பந்தல் அமைக்கப்பட்ட இடங்களை தாண்டி, திறந்த வெளியில் மக்கள் நின்றதனால் அதிக வெப்பம் மற்றும் புழுக்கத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இதில் மயக்கமடைந்தவர்கள் சிகிச்சை எடுக்க தாமதமாகியுள்ளது. இது இறப்பிற்கு வித்திட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததே நெரிசல் ஏற்படக் காரணம் என சிக்கந்தர ராவ் காவல் நிலைய மூத்த அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனைக்கு சிலரும், அலிகார் மருத்துவமனைக்கு சிலரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எல்லையோர (சிக்கந்தர ராவ் பகுதி) மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தோரின் உடல்களை மருத்துவமனை நிர்வாகம் தரையிலேயே போட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உடல்களை பாதுகாத்தவாறு சோகத்தில் மூழ்கியுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.