For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!

08:57 PM Apr 19, 2024 IST | Web Editor
ஓயாத மணிப்பூர் கலவரம்   துப்பாக்கிச்சூடு… evm எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்
Advertisement

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் இன்று (19-ம் தேதி) தொடங்கியது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

நாடு முழுவதும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல், வாக்குப்பதிவு எந்திரங்களுக்கும் தீ வைத்தது. மற்றொரு பகுதியில் துப்பாக்கியுடன் வன்முறைக் கும்பல் ஓடுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அரங்கேறின. துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்பால் மேற்கில் உள்ள கைடெமில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துள்ளது. அந்த தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் பிமோல் அகோஜம் வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களுடன் இதுகுறித்து பேசியதையடுத்து பிரச்னை தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதேபோல், அம்மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்மாநிலத்தின் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி வரை 67.66% வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதம் ஏந்திய குழுவினர் வாக்காளர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மிரட்டியதாக புகார்கள் எழுந்துள்ளன.

Tags :
Advertisement