வரலாறு காணாத மழை - பாதிக்கப்பட்டோருக்கு உதவ விரும்புவோர் நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கலாம்!
வரலாறு காணாத மழையாக தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ விரும்புவோர் நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கலாம் என நியூஸ் 7 தமிழ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற தென் மாவட்டங்களும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலை குறித்தும், மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததார்.
மேலும் இன்றும் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பவுடர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தர விரும்புவோர் நியூஸ் 7 தமிழின் சென்னை அலுவலகத்திற்கு நேரில் வந்து வழங்கலாம்.
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. பொதுமக்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என நியூஸ்7 தமிழ் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.