க்யூட் தேர்வு முடிவு எப்போது? UGC தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கொடுத்த அப்டேட்!
க்யூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.
என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நாடு முழுவதும் முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. நீட், யுஜிசி நெட் தேர்வு, சிஎஸ்ஐஆர் நெட் ஆகிய தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமையே நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. நீட் இளநிலைத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம், தாள் கசிவு, மோசடி, முறைகேடுகள் கண்டறியப்பட்டன. கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியது.
நாடு முழுவதும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல் படிப்பில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுகள் கடந்த மே மாதம் நடைபெற்றது.15 படிப்புகளுக்கு நேரடி எழுத்துத் தேர்வு முறையிலும், மற்ற 48 பாடங்களுக்கு கணினி அடிப்படையிலும் நடத்தப்பட்ட க்யூட் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினர்.
ஆனால், இதுவரை இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. கடந்த ஜூன் 30-ஆம் தேதியே இதன் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இதையும் படியுங்கள் : இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது :
"முழுமையாக மதிப்பை இழந்துள்ள என்டிஏ, க்யூட் முடிவுகளை கடந்த ஜூன் 30-ஆம் தேதியே வெளியிடுவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரும் 10-ஆம் தேதி தான் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த தேர்வை எழுதிய ஏராளமான மாணவர்கள் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறவும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறவும் காத்திருக்கின்றனர். எனவே, தோ்வு முடிவுகள் அறிவிப்பதை தாமதிப்பது மாணவர்களைப் பாதிக்கும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் இதுகுறித்து பேட்டியளித்த யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், "க்யூட் முடிவுகளை அறிவிப்பதற்கான பணிகளை என்டிஏ தீவிரப்படுத்தியுள்ளது. முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.