“வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்!” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி
வெள்ளம் பாதித்த பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(07.12.2023) காலை சென்னை வந்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் அவரை வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ராணுவ ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் சென்றார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் புயல் பாதிப்பு, எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
'புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டது அறிந்து பிரதமர் மோடி கவலையுற்றார். தமிழக மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்யும். பிரதமரிடம் நான் தனிப்பட்ட முறையில் இதுகுறித்து பேசி கண்காணிக்குமாறு கூறியிருக்கிறேன். ராணுவம், கடற்படை, தேசிய மீட்புப்படை என அனைத்துத் துறையினரும் தீவிரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நானும் சென்னையில் ஆய்வு செய்த பின்னர், முதல்வரை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தேன். தமிழக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமரின் சார்பில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 450 கோடி மட்டுமின்றி சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கும் மத்திய அரசு ரூ. 561.29 கோடி நிதி வழங்கியுள்ளது' என்று தெரிவித்தார்.