மத்திய அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஏன் தெரியுமா?
மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரது சகோதர் பசுபதி பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : மதுரை சித்திரை திருவிழா : ஏப்.23ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
இதையடுத்து, பசுபதி பராஸ் மற்றும் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில், ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராஸும், லோக் ஜனசக்தி என்ற கட்சியை சிராக் பஸ்வானும் தொடங்கினர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் சிராக் உடன் கூட்டணி அமைப்பதாக பாஜக அறிவித்ததை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பசுபதி பராஸ் விலகியுள்ளார்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து பசுபதி பராஸ் கூறுகையில், "நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து அறிவித்தது. தங்களுடைய கட்சி ஐந்து எம்.பி.க்களை கொண்டுள்ளது. நான் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றினேன். எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்"
இவ்வாறு பசுபதி பராஸ் தெரிவித்துள்ளார்.