செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு- மூக்கில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு!
பெங்களூரில் மத்திய அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, அவருக்கு திடீரென மூக்கில் ரத்தம் வழிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து நடத்தும் பாதயாத்திரை குறித்து பேசிக்கொண்டிருந்த குமாரசாமி மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வழிந்தது.
கோல்ட் ஃபிஞ்ச் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செய்தியாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், குமாரசாமி சட்டையில் ரத்தத்தில் படிந்திருந்தது. அவர் பக்கவாத பிரச்னைக்கு மாத்திரை எடுத்துவரும் நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதிக உடல் உஷ்ணத்தின் காரணமாக மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததாக மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்ன பிரச்னை என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இன்று நடைபெற்ற பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெங்களூரு முதல் மைசூரு வரை பாத யாத்திரை நடத்தவும், சமீபத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.