ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இது 2019ஆம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட உலக தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.