“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டார்!” - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு இன்றோடு நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேசி வெட்கக்கேடான மிரட்டலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது X தள பக்கத்தில் பதிவிட்டதாவது:
தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ள ஏதுவாக அமித் ஷா 150 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்துள்ளார். அதோடு மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளார் என பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ். அரசு அதிகாரிகள் எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அரசமைப்பை நிலைநிறுத்த வேண்டுமென கூறியுள்ள அவர், ஜூன் 4-அம் தேதி மக்களே வெற்றி பெறுவர் எனவும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.