கிராம சாலை திட்டங்களில் தமிழகத்தை, ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது - மதுரை எம்.பி, சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
”கிராமங்கள் தோறும் இணைப்பு சாலைகள் அமைப்பதில் மதுரை மாவட்டம் தன்னிறைவு பெற்றுள்ளது. 70 க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தோம். ஒன்றிய அரசு கிராம சாலைகள் அமைக்கும் திட்டங்களில் தமிழகத்தை வஞ்சிக்கிறது. உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையின் தூய்மையும், தூய்மை பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்லாண்ட் நிறுவனம் 23 தூய்மை பணியாளர்களை நீக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை. தொழிலாளர்கள் சட்டங்களை பின்பற்றாமல் தூய்மை பணியாளர்கள் எப்படி பணி நீக்கம் செய்ய முடியும்? மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட உத்தரவிடப்பட்டுள்ளது”
என்றார்.