மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான Debendra Pradhan (வயது 84) உடல் நலக்குறைவால் இன்று(மார்ச்.17) காலமானார். இவரது இறுதிச்சடங்கு புவனேஸ்வரில் உள்ள புரி ஸ்வர்கத்வாரில் நடைபெற்றது.
தேபேந்திர பிரதான் ஒடிசா அரசியலின் முக்கியப் பிரமுகரும், மூன்று முறை பாஜக மாநிலத் தலைவராகவும் இருந்தார். அங்கு பாஜகவின் அடித்தளத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். பாஜகவின் தல்சர் மண்டல் தலைவராக (1980-1983) தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், 11998இல் ஒடிஸாவின் தியோகர் தொகுதியிலிருந்து 12வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவையில் அறிமுகமான பிறகு வாஜ்பாய் அரசில் போக்குவரத்துக்கான இணையமைச்சராக அவருக்கு ஒதுக்கப்பட்டது.
1999 தேர்தலில் மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட அவர், 1999 முதல் 2001 வரை போக்குவரத்து மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேபேந்திர பிரதான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன், அவருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கடினமான காலத்தை கடக்க மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலிமை கிடைக்கட்டும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.