மத்திய அமைச்சரவை ஒப்புதல் - பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு!
இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரும் புதிய மசோதாவை, சில மாற்றங்களுடன் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, வருமான வரிச் சட்ட மசோதாவை ஆய்வு செய்வதற்காக, பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வைஜயந்த் பாண்டா தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
மேலும் சிறப்பு குழுவின் பரிந்துரைகளை இணைத்து, வருமான வரிச் சட்டத்தில் புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், வருமான வரிச் சலுகைகள் மற்றும் பல சீர்திருத்தங்களை அறிவித்திருந்தார். இந்த புதிய மசோதா, அந்த பட்ஜெட் அறிவிப்புகளை சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோரின் சுமைகளைக் குறைப்பதும், வரி அமைப்பை எளிதாக்குவதும் இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.